நெல்லை மாவட்டம் அம்பை ஏஎஸ்பியாக இருந்தவர் பல்வீர்சிங். இவர் தனது எல்கைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதுதவிர அம்பை, விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி பகுதி போலீஸ் அதிகாரிகள் சிலர் காத்திருப்போர் பட்டியலுக்கும், ஆயுதப்படைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை மேற்கொண்டார். அவர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை தமிழக அரசு நியமித்தது. இதையடுத்து விசாரணை அதிகாரி அமுதா நேற்று தனது விசாரணையை தொடங்கினார். அப்போது சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணை தொடர்பாக நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வாக்குமூலம் அளித்தவர்கள், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உடன் தனிப்படையில் பணியாற்றியவர்களிடம் அதிகாரி அமுதா விசாரிக்க உள்ளார். இந்த நிலையில், ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரத்தில் இன்று அம்பாசமுத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா விசாரணை நடத்துகிறார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சாட்சிகளை விசாரிக்கிறார். பாதிகப்பட்டவர்களும், இதுவரை புகார் அளிக்காதவர்களும் இன்று நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள், காத்திருப்போர் பட்டியலில் உள்ள போலீசார் என அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணை நடத்த உள்ளார். இந்த விசாரணை அறிக்கையை 1 மாதத்துக்குள் அவர் தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.