சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருகிறார்கள். தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சன்னிதானம் சென்று 18-ம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்கிறார்கள். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறந்து ஒரு மாதம் ஆன நிலையில் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக கேரள தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர். வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. இன்னும் 10 நாட்களே இருப்பதால் கோவிலில் கூடுதல் வசதிகள் செய்ய அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்வது மற்றும் மாற்று திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகளுக்கு என தனி வரிசை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுபோல கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்தும் சபரிமலைக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் பாதுகாப்புக்காக சபரிமலையில் ஐ.ஆர்.பி. போலீசாரின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்ப ட்டிருப்பதையும் தெரிவித்தார். நாளை முதல் மத்திய ரிசர்வ் பட்டாலியன் ஐ.ஆர்.பி. போலீசார் சபரிமலையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில் காந்த் தெரிவித்துள்ளார். மத்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசாருடன் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு திருவிழா வரை இவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று டி.ஜி.பி. அனில் காந்த் தெரிவித்தார்.