ஐபிஎல் சாம்பியன்ஸ் டிராபியை மும்பை 5 முறையும், சென்னை 4 முறையும் வென்றுள்ளது. 5 கோப்பைகளை வென்ற மும்பை அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், 4 முறை வென்ற சென்னை அணிக்கு தோனி கேப்டனாகவும் இருந்துள்ளனர். இதனால் இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தோனிக்கு எப்போதுமே ரசிகர்கள் அதிகம் உண்டு. கடந்த முறை மும்பையில் இரு அணிகளும் விளையாடிய போது, சென்னை அணி ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானமே மஞ்சள் நிறத்தில் காட்சி அளித்தது. இதே போன்று ஆர்சிபி விளையாடும் ஆட்டத்திற்கும் விராட் கோலி ரசிகர்கள் மும்பையை ஆக்கிரமித்து விட்டார்கள்.
இதனால் மும்பை அணி உரிமையாளர் நிதா அம்பானி, தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் மற்ற ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, மும்பை ரசிகர்களுக்கு பிரத்யேகமாக அந்த மைதானத்தில் இரண்டு கேலரிகளை நிதா அம்பானி முன்பதிவு செய்துள்ளார். அந்த கேலரியில் மும்பை அணி ரசிகர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் நடைபெறும் ஐபில் போட்டியை மற்ற அணி ரசிகர்கள் அதிகளவில் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும், மும்பை அணியுடனான மோதலில் சென்னை ரசிகர்கள் குறைந்த அளவில் தான் இருப்பார்கள் என்றும், மைதானமே நீல நிற ஜெர்சியில் காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது.