நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடித் துறைமுகம் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மீனவர்கள் கடந்த காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை துவங்க வேண்டும் எனவும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனுவும் அளித்திருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு க ஸ்டாலின் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறு துறைமுகம் கட்டப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ள, நாகை சாமாந்தான்பேட்டை மீனவர்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர்
ஷாநவாஸ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். புதிய துறைமுகம் அறிவிப்பை தொடர்ந்து முதன்முறையாக நாகை சாமந்தான்பேட்டை மீனவர்கள் இன்று ஒரு நாள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்காக சாமந்தான்பேட்டை கடற்கரையில் குவிந்த மீனவர்கள் அங்கு பட்டாசுகளை வெடித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை வாழ்த்தி, வாழ்த்து கோஷங்களையும் எழுப்பினர்.