இயேசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் மனிதனாக பிறந்து வாழ்ந்தார். அவர் தனது 33-வது வயதில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இதை நினைவுகூரும் வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை, தியானம், திருத்தல யாத்திரைகள், சேமிப்புகளின் மூலம் பிறர் நலப் பணிகள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரம் , அல்லது பெரிய வாரம் என கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பெரிய வியாழனாக கடை பிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து அவரது சீடரான யூதாசால் காட்டி கொடுப்பதற்கு முன்பு இரவு சீடர்களுடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அன்புடனும், தாழ்மையுடனும் பிறருக்கு சேவை செய்து வாழ்வதன் அவசியத்தை சீடருக்கு உணர்த்தும் வகையில் சீடர்களின் பாதங்களை கழுவி துடைத்தார்.
அதை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் இன்றைய (வியாழக்கிழமை) தினத்தை பெரிய வியாழன் என்று கடை பிடிக்கிறார்கள். இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் மாலை சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெறும். குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்களில் திருப்பலியின் போது இயேசுவின் சீடர்கள் 12 பேரை உணர்த்தும் வகையில் 12 பக்தர்களின் பாதங்களை அருட்பணியாளர்கள் கழுவி துடைத்து முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதைத்தொடர்ந்து நாளை புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. நாளை இயேசுநாதர் சிலுவையில் அறையுண்ட சம்பவத்தை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். அதைத்தொடர்ந்து வரும் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.