தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை, வெட்டுக்கூலி, வண்டி வாடகை உள்பட 112 கோடி நிலுவை தொகை வழங்க வலியுறுத்தியும், ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் பெற்ற 300 கோடி கடனை ஆலை நிர்வாகமே செலுத்த வலியுறுத்தி வருகின்றனர். 125வது நாளாக கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு கரும்பு விவசாயிகளை ஆதரித்து கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது, கரும்பு விவசாயிகள் பெயரில் மோசடியாக 300 கோடி கடன் பெற்ற திருஆரூரான் சர்க்கரை ஆலை உரிமையாளர் மீதும், துணை போன வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். கரும்பு விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காணவில்லை எனில் ஆலையை கரும்பு விவசாயிகள் கைபற்றும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.