தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருபவர் சண்முகராஜன் (46). இவர் நேற்று இரவு தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் யாகப்பா நகர் அருகே சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் வந்தனர்.
திடீரென அவர்கள், சைக்கிளில் சென்ற சண்முகராஜனை தள்ளி விட்டு, விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகராஜன் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இருப்பினும் அந்த 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளிலில் தப்பிச்சென்று விட்டனர்.
இந்த நிலையில் ஓட்டல் ஊழியரிடம் இருந்து செல்போனை பறித்துச்சென்ற அந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மங்களபுரத்தில் சென்ற போது ஒருவரிடம் செல்போனை பறிக்க முயன்றனர். உடன் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 2 பேரையும் வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் அந்த 2 பேரையும் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அந்த 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர் சண்முகராஜனிடம் செல்போனை பறித்து சென்றவர்கள் இவர்கள்தான் என்று தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் சண்முகராஜனின் செல்போனும் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் செல்போனையும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்திய போது அவர்கள், தஞ்சை அண்ணாநகர் 2-ம் தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன், தஞ்சை அன்புநகர் 1-ம் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.