கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் 1 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ஏப்ரல் 3ம் தேதியான இன்று முதல் 1 மாதத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றியம், நகரம், பேரூர், கிளை கழங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த பணியினை திமுகவினர் உற்சாகமாக இன்று தொடங்கினர்.
திருச்சி வடக்கு மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் முசிறி கைகாட்டியில் இன்று காலை தொடங்கியது. இந்த முகாம் துவக்க விழாவுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.1 மாதத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து முதல்வரின் பாராட்டை பெற வேண்டும் என்று அப்போது அமைச்சர் நேரு, திமுக நிர்வாகிகளிடம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சு.ராமச்சந்திரன், கே.கே. ஆர். சேகரன், பாப்பாப்பட்டி பெரியசாமி, தொட்டியம் திருஞானம், தங்கவேல், முசிறி நகர செயலாளர் சிவக்குமார், மாநில மாணவரணி துணை செயலாளர் கோகுல், இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
.