தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னைியல் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் , கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே தொகுதிகள் குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. 2024,2026 ஆண்டு தேர்தல் குறித்து 2 மணி நேரம் அமித்ஷாவிடம் பேசினேன். 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். இப்போதைய நிலையில் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கை குறித்து பேசுவது சரியல்ல. பாஜக 9 தொகுதிகளில் மட்டும் தான் இருக்கிறதா, மற்ற 30 தொகுதிகளிலும் பாஜக இல்லையா? தேர்தலில் தோல்வி அடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் நான் பேசி வருகிறேன் என்றார்.
அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ளது என அமித்ஷா கூறி உள்ளார். அதிமுக பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் டில்லியில் உள்ள பாஜக தலைவர்கள் தானே தவிர மாநிலத்தில் உள்ளவர்கள்(அண்ணாமலை) இல்லை. பாஜ. தேசிய தலைவர் ஜேி.பி நட்டா உள்ளிட்டோர் கூட்டணி குறித்து பேச்சுவார்ததை நடத்துகிறார்கள். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்தில் இணைய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம். எத்தனை சோதனைகளை கண்டாலும் நிச்சயம் வெற்றிபெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலையின் கருத்துக்கு எடப்பாடி சுடச்சுட பதில் அளித்துள்ளதால்,, பாஜக-அதிமுக இடையே மோதல் போக்கு இன்னும் தீரவில்லை என்றே தெரிகிறது.