இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாரிக்கும் வகையில் 40 நாள் நோன்புக் காலம் சாம்பல் புதனுடன் தொடங்கி அனுசரிக்கப்படுகிறது. ஏப்ரல் 2ம் தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சாவின் தூதன் ‘கடந்து சென்ற’ அந்த விழா தான் ‘பாஸ்கா’ என யூதர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப் படுகிறது. சுமார் 3300 ஆண்டுகள் பழமையான இந்த விழா, புதிய ஏற்பாட்டில் புதிய பரிமாணம் பெறுகிறது. புதிய ஏற்பாட்டை நிஜம் என்றும், அதன் நிழல் தான் பழைய ஏற்பாடு என்றும் விவிலிய ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
இந்த விழா இயேசுவின் மரணத்தின் நிழல். பாஸ்கா விழாவுக்கு ஒரு ஆடு கொல்லப்பட வேண்டும். புதிய ஏற்பாடு இயேசுவை ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிடுகிறது. பாஸ்காவில் கொல்லப்படும் ஆட்டின் வயது ஒன்று, அது மனித வயதோடு ஒப்பிடுகையில் 30 என்கின்றனர் ஆய்வாளர்கள். இயேசுவின் வயது 33.
பாஸ்காவில் ஆடு கொல்லப்பட வேண்டிய நேரம் மதியம் சுமார் மூன்று மணி. இயேசு கொல்லப்பட்ட நேரம் மதியம் மூன்று மணி. இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறியபின் மன்னன் மீண்டும் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பழிவாங்க முயல்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக கடவுள் செங்கடலை இரண்டாய் பிரிக்க, மக்கள் அதன் வழியே நடந்து மறுகரைக்குச் செல்கின்றனர். துரத்தி வந்த எகிப்திய படை நீரில் மூழ்கி அழிகிறது. இப்போது முழுமையான விடுதலை. இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாவது நாள் இது நிகழ்கிறது.
இயேசு மரணத்தை வென்று உயிர்த்தது மூன்றாவது நாள். இப்படி இயேசுவின் மீட்பின் வாழ்க்கை இஸ்ரயேல் மக்களின் விடுதலை வாழ்க்கையோடு நெருக்கமாய் இணைந்து விடுகிறது. ‘நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்’ (1 கொரி 5:7) எனும் விவிலியம் இயேசுவின் மரணத்தையும் உயிர்ப்பையும் ‘புதிய பாஸ்கா’ வாகக் கொண்டாடுகிறது. பாவம் எனும் இருள் கொண்டு வருகின்ற சாவை, இயேசுவின் ரத்தம் எனும் பலி மீட்கிறது. அதை நினைவுகூர்ந்து பாவவாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும் எனும் சிந்தனையை இந்த விழா நமக்கு விளக்குகிறது.