சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விராலிமலை எம்எல்ஏ டாக்டர் விஜயபாஸ்கர்(அதிமுக) விராலிமலை நகரப் பகுதிக்கு கூடுதலாக காவிரி குடிநீர் வழங்க அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு… 25 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட குடிநீர் இணைப்புகள் இவை. நிறைய இடங்களில் சேதமடைந்திருந்த குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டது. புதுக்கோட்டை, விராலிமலை பகுதிக்கு புதிய குடிநீர் திட்டம் 547 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தகுந்த நிதி ஆதாரத்தை தேடி வருகிறோம்.
அதற்கு காலமாகும் என்பதால் தற்போது 76 கோடி ரூபாய் செலவில் பழைய குடிநீர் பைப் லைன்களை சரி செய்து முழு தண்ணீர் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். மீண்டும் பேசிய விஜயபாஸ்கர், அதற்கான திட்ட அனுமதி உடனடியாக வழங்க வேண்டும். 1995ல் போடப்பட்ட குடிநீர் திட்டம் 28 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே புதுக்கோட்டை, அன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகளை சேர்த்து ஒரே புதிய குடிநீர் திட்டமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, ‘உறுப்பினரின் கருத்தை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.