Skip to content
Home » மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

மந்தனாவின் குத்தாட்டத்துடன்…..ஐபிஎல் போட்டி இன்று தொடக்கம்…..

  • by Authour

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை)   மாலை ஆமதாபாத்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. மே 28-ந்தேதி  இறுதிப்போட்டி நடக்கிறது.  இந்த கிரிக்கெட் போட்டியில்  சென்னை, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், டில்லி உள்பட 12 நகரங்களில் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்,

‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன. கடந்த ஆண்டில் முதல் 4 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதுடன் கடைசியில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை அணி அந்த மோசமான நிலைமையை மாற்றி வெற்றியுடன் தொடங்கும் ஆவலில் வியூகங்களை தீட்டி வருகிறது. 41 வயதான கேப்டன் டோனிக்கு அனேகமாக இது தான் கடைசி ஐ.பி.எல். தொடராக இருக்கும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஏறக்குறைய ஓராண்டுக்கு பிறகு மட்டையை சுழற்ற வருவதால் அவரது தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பு போல் முத்திரை பதிப்பாரா ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் இன்னும் 22 ரன் எடுத்தால் ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு (தகுதி சுற்றில் தோற்கும் அணி) ரூ.7 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு (வெளியேற்றுதல் சுற்றில் தோற்கும்அணி) ரூ.6½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிகிறது. அத்துடன் அதிக ரன் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி கவுரவத்துடன் ரூ.15 லட்சமும், அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலருக்கு ஊதா நிற தொப்பியுடன் ரூ.15 லட்சமும் கிடைக்கும்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டெலிவிஷனில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

வழக்கமாக ‘டாஸ்’ போடுவதற்கு முன்பாக ஆடும் 11 வீரர்களின் பட்டியலை இரு அணிகளின் கேப்டன்களும் பரிமாறிக் கொள்வார்கள். அதில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. இனி ‘டாஸ்’ போட்ட பிறகு 11 வீரர்களை இறுதி செய்யும் நடைமுறை இந்த ஐ.பி.எல்.-ல் புதிதாக வருகிறது. *விக்கெட்டுக்கு மட்டுமின்றி வைடு அல்லது நோ-பால் நடுவர் வழங்கியதில் ஆட்சேபனை இருந்தாலோ அல்லது அவற்றை வழங்க கோரியோ டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்யவும் இந்த முறை அனுமதிக்கப்படுகிறது.

ஐபிஎல் போட்டியின் தொடக்கவிழாவையொட்டி போட்டி தொடங்குவதற்கு முன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் ராஷ்மிகா மந்தனாவின் குத்தாட்டமும் இடம் பெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *