கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த கையோடு நேற்று புதுமணப்பெண் ரம்யா தனது கணவருடன் தாய் வீட்டிற்கு விருந்து சாப்பிடும் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். உறவினர்கள் வெளியே இருந்த நேரத்தில் வீட்டில் இருந்த தனி அறை ஒன்றில் ரம்யா தூக்கு போட்டுள்ளார். நீண்ட நேரம் அவர் வெளியே வராததை அறிந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரம்யா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். அதிர்ச்சடைந்த உறவினர்கள் இதுகுறித்து மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரம்யா உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து மூன்று நாளில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சந்தேகத்தையும், உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.