தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திங்களூரைச் சேர்ந்தபால்ராஜ் என்பவரின் மகன் கோபிநாத் (25). இவர் கடந்த 2018 ம் ஆண்டு 17 வயது சிறுமியைக் காதலித்துள்ளார். அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி அவரை கர்ப்பமாக்கினார். இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால், திருமணம் முடிந்து 3 நாள்களுக்கு பின்னர் கோபிநாத் வேலை தேடி வெளியூருக்குச் சென்றார். பின்னர் கோபிநாத் திரும்பி வரவில்லை. இதையடுத்து அந்த சிறுமிக்கு 8 மாதங்களில் குழந்தை பிறந்து இறந்து விட்டது. தொடர்ந்து அச்சிறுமியை கோபிநாத் குடும்பத்தினர் வீட்டை விட்டு துரத்தி விட்டுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி திருவையாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து கோபிநாத்துக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.