தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆகியவை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டு விழுமியங்கள் என்கிற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் கருத்தரங்கக் கோவையை வெளியிட்ட அவர் மேலும் பேசியது:
தமிழ் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய நூல்கள் கடல் போன்றது என்பதை விட, கடலோரத்திலுள்ள மணற்பரப்பு போன்றது என்றே கூற வேண்டும். மணலை ஒரு பிடி கையில் அள்ளி எத்தனை மணல் துகள்கள் உள்ளன என்பதை எப்படி எண்ணிக்கையில் சொல்ல முடியாதோ, அதுபோன்றதுதான் நம் தமிழ் நூல்களின் எண்ணிக்கை.
சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய கால இலக்கியங்கள், ஐம்பெரும்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரைநடை இலக்கியங்கள், புதுக்கவிதைகள், நாடகங்கள், கடித இலக்கியங்கள் என பல்வேறு வகைகள் நிரம்பியுள்ளன. அவை அனைத்தையும் உள்ளடக்கிய தலைப்பாக இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தலைப்பு அமைந்துள்ளது என்றார் ஆட்சியர்.
இவ்விழாவுக்கு துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தார். கருத்தரங்கக் கோவையை பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் (பொ) தெ. ஞானசுந்தரம் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
பாரத் கல்விக் குழுமச் செயலர் புனிதா கணேசன், இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் பெருமாள் சரவணகுமார், கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் ப. ஜெயகிருஷ்ணன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புல முதன்மையர் ச. கவிதா ஆகியோர் பேசினர்.
முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகக் கலைப் புல முதன்மையர் பெ. இளையாப்பிள்ளை வரவேற்றார். நிறைவாக, முனைவர் மா. சதானந்தம் நன்றி கூறினார்.
தொடர்ந்து நடைபெறும் இக்கருத்தரங்கம் வியாழக்கிழமை மாலை நிறைவடைகிறது.