திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அப்பள்ளியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர்.
மாணவிகள் சண்டையிட்டு கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே அங்கு சென்று மோதலை தடுத்து நிறுத்தினர். மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ் அப் மூலம் பல்வேறு தகவல்களை அனுப்பியுள்ளார்.
மேலும் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த அந்த மாணவனை காதலித்து வந்த மாணவி, எப்படி நான் காதலிக்கும் மாணவனுடன் சாட்டிங்கில் ஈடுபடலாம் என கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் இந்த பிரச்சினை தொடர்பாக பேசி தீர்த்து கொள்வதற்காக 2 மாணவிகளும் தங்களுடன் படிக்கும் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு மாணவனை, இரு மாணவிகளும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. நான் தான் முதலில் தேர்வு செய்தேன். எனவே நீ விலகிவிடு என்று ஒருவர் கூறி உள்ளார்.
அவனை ஏற்கனவே எனக்கு தெரியும். நானும் அவனுடன் தொடர்பில் தான் உள்ளேன், எனவே நீ விட்டுக்கொடுத்து விட்டு போ என கூறி உள்ளார். அதற்கு பஞ்சாயத்து பேச வந்த சக மாணவிகள், அந்த மாணவனை நாளைக்கு இங்கு அழைத்து வந்து அவனிடமே கேட்டுவிடுவோம், அவன் யாரை விரும்புகிறானோ அவள் மட்டும் காதலிக்கட்டும், அடுத்தவள் விட்டுவிட வேண்டும் என ஒரு உடன்பாட்டு திட்டத்தை கொண்டு வந்தனர்.
அதற்கு இனனொரு தரப்பு மாணவிகள், அந்த மாணவன் இரண்டு மாணவிகளிடமும் தொடர்பு வைத்துக்கொள்வேன் என்று கூறினால் என்ன செய்வது என ஒரு கருத்தை சொல்லி உள்ளனர். இதனால் சுமூக முடிவு ஏற்படாமல் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதுடன், சென்சார்போர்டே மயங்கி விழும் அளவுக்கு வார்த்தைகளை பொழிந்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர் இரு தரப்பு மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார். ஒரு காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.