அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதனை தொடர்ந்து பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என அறிவித்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 17-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்றும் முடிவை அறிவிக்கலாம் என கூறிய நீதிபதி கே.குமரேஷ்பாபு ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றார்., இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் பதவியை ஏற்றது செல்லாது அவர் எந்த முடிவையும் எடுத்து அறிவிக்க தடை விதிக்க கோரி மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..