அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக தொடர்பாக தனி நீதிபதி உத்தரவு முன்னுக்கு பின் முரணாக உள்ளது, தனி நீதிபதி உத்தரவு கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டை நாளை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் விசாரிக்கின்றனர். ஓபிஎஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, மனோஜ்பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம் பாரதி மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என தனி நீதிபதி குமரேஷ் பாபு இன்று காலை தீர்ப்பளித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், மேல்முறையீடு தொடர்பாக காலையில் முறையிட்ட நிலையில், தற்போது ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ்-யின் மனு நாளை விசாரிக்கப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.