கரூர் அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம், கிணற்றில் சிக்கிக் கொண்ட இவர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள குள்ளம்பட்டி என்ற கிராமத்தில் தண்ணீர் இல்லாத வறண்ட விவசாய கிணற்றில் தூர் வாரும் பணி நடந்தது. சந்தோஷ் குமார், சரவணன், சாமிநாதன், ஆனந்த் ஆகிய 4 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்தோஷ் குமார் (24), சரவணன் (33) ஆகிய இருவரும் கயிறு கட்டி கிணற்றில் இறங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கயிறுஅறுந்தது. இதனால் கயிற்றின் வழியாக இறங்கிய சந்தோஷ்குமாரும், சரவணனும் கிணற்றில் விழுந்தனர். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினர்.
தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் உதவி மாவட்ட அலுவலர் சந்திரகுமார் தலைமையில் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி கயிறு மூலம் ஸ்ட்ரெச்சரில் கட்டி காயமடைந்தவர்களை உயிருடன் மேலே பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.