நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் விசாரணை நடத்தி வந்தார். அப்போது குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று வாயில் கற்களை போட்டு, அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் அவர் ஈடுபடுவதாக சமீபத்தில் சிலர் புகார் கூறினர். பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களிலும் தகவல்கள் பரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்வீர்சிங் நேற்று காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
பல்வீர்சிங்கின் கொடூரம் குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதுபற்றி விசாரிக்க, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட தகவலின் உண்மை தன்மையை ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறும் எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போராட்டங்களை நடத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. இதற்காக 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி சிலர் விளக்கங்களை கேட்டனர். இந்தநிலையில் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரையில் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் போலீஸ் நிலையம் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணையை நேற்று தொடங்கினார்.
பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர், சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய 3 பேருக்கு உதவி கலெக்டர் அலுவலகம் மூலம், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மன் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் சம்மனை பெற்றுக் கொண்டு அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, பல் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்தும், கைது செய்யப்பட்டவர்கள் விவரம், அப்போது போலீஸ் அதிகாரிகள் யார்? யார்? பணியில் இருந்தார்கள்? என்பது குறித்தும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடைபெறுகிறது.