அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இதில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.இந்நிலையில் தான் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் நீதிமன்றத்தை ஓ பன்னீர் செல்வம் தரப்பு நாடியது.இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டாதல் ஏப்ரல் 11ம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 22ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஓ பன்னீர் செல்வம் தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி வாதாடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சட்டப்படி பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ரிசல்ட்டை வெளியிடக்கூடாது என கூறியது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை காலை 10.30 தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..