தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேவுள்ள மூங்கில்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் டிரைவர் தொழில் பார்த்து வருகிறார். இவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த யாஷ்மின் என்ற பெண்ணை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவப்பரியன் (5), பிரகல்யா (1 1/2) வயதில் இரண்டு குழந்தகைள் உள்ளனர். மதம் மாறி திருமணம் செய்ததால் தொடர் பிரச்சனை நீடித்து வந்துள்ளது. மகனுக்கும் பெற்றோர்களுக்குமே சொத்து தொடர்பாக தகராறும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று தனது வீட்டருகே இருந்த பிரகாஷை அவரது தாய், தந்தை இருவருமே சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத பிரகாஷ் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றிருக்கிறார். விடாமல் விரட்டி துரத்திய பிரகாஷின் தந்தை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்றதில் தடுமாறி கீழே விழுந்தார். வெட்டு காயபட்ட பிரகாஷ் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பிரகாஷ் தாய், தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் புகார் தர வந்திருந்தார்.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த போலீசார், பிரகாஷை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.