தமிழ்நாடு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி ெவளியிடப்பட்டது. இதில் தென்காசியில் ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தென்காசியில் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து சபையில் விவாதிக்க வேண்டும், தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர். என்று சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதில் எடப்பாடி பழனிசாமி, தவாக வேல்முருகன் உள்பட பலர் பேசினர்.
இதற்கு நிதித்துறை ,பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு நடந்தது. தென்காசி மாவட்டத்திலேயே 397 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு பயிற்சி மையம் சார்பில், தங்கள் மையத்தில் படித்த 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக தவறான விளம்பரம் கொடுத்துள்ளனர். முறைகேடு புகார் குறித்து விரிவான அறிக்கை அளிக்க தேர்வாணைய செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். தேர்வாணையத்தில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.