தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது- 10,117 இடங்களுக்கு 18லட்சத்து 36ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த 24ம் தேதி மாலை வெளியானது. இந்த நிலையில் தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் எல்லாரும் தேர்ச்சி பெற்றது போல இந்த முறை தென்காசியில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
வினாத்தாள்கள் கருவூலம் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டபோது கருவூல அதிகாரிகளை சரிக்கட்டி வினாத்தாள்கள் முன்கூட்டியே சிலரது கைகளில் கிடைத்தாகவும் இப்போது சிலர் புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் குரூப்4 தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதை உறுதி செய்யும் வகையில் தென்காசியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். குறிப்பாக மயிலாடுதுறையை சேர்ந்த பலரும் தென்காசியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். எனவே இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.