கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் பாலு என்கிற பாலகிருஷ்ணன்(22), இவருக்கும், தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடப்பதாக இருந்தது.
இதற்காக நேற்று இரவே மணமகள் மற்றும் அவரது வீட்டார் மண்டபத்துக்கு வந்து விட்டனர். இன்று காலை மணமகன் தரப்பினரும் வந்தனர். உறவினர்கள் அனைவருக்கும் காலையில் டிபன் வழங்கப்பட்டது. முகூர்த்தம் முடிந்ததும் உறவினர்களுக்கு வழங்க மதியத்துக்கான அறுசுவை விருந்தும் தயாராகி கொண்டிருந்தது.
மணமக்கள் மேக்கப் போட்டு ஆசை கனவுகளோடு, மணக்கோலத்தை நெருங்கிகொண்டிருந்தனர்.இந்த நிலையில் சினிமா காட்சி போல, தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விமலா மற்றும் தஞ்சை மகளிர் போலீசார் மண்டபத்துக்கு வந்தனர். திடீரென போலீசார் அங்கு வந்ததால் திருமண மண்டபம் பரபரப்பானது. அப்போது குழந்தைகள் நல அதிகாரி மற்றும் பெண் போலீசார் மணமகளின் பெற்றோரை அணுகி, 18 வயது நிரம்பாத சிறுமிக்கு எப்படி திருமணம் செய்யப்போகிறீர்கள். இது சட்டப்படி தவறு. திருமணம் செய்தால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
பின்னர் மணப்பெண் , மணமகன் மற்றும் அவர்களது பெற்றோரை விசாரணைக்காக குழந்தைகள் நல அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் திருமணம் தடைபட்டது.ஆனாலும் திருமணத்திற்கு வெளியூர்களில் இருந்து வந்த உறவினர்கள் மதியம் சாப்பிட்டு விட்டு போகலாம், என மண்டபத்திலேயே இருந்தனர்.