கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான் என குறிப்பிட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை விமர்சனம் செய்த ராகுல்காந்தி ரபேல் தொடர்பான வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டி .. காவலன் என்று சொல்லி கொள்பவரை திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது கருத்து தெரிவித்திருந்தார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராகுல்காந்தியின் விமர்சனத்திற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி எழுத்துப்பூர்வமாக… என்னுடைய வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தின் மாண்பை மதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை என கூறி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இனிவரும் காலங்களில் வார்த்தைகளில் கவனமாக இருக்கும்படி கண்டிப்புடன் ராகுல்காந்திக்கு அறிவுறுத்தியிருந்தது..