நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் போயஸ்கார்டன் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி ஐஸ்வர்யா தனது நகைகள் உள்ள லாக்கர் பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லாக்கர் பெட்டியில் இருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணவில்லை. உடனே ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாதமாக ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த திருட்டு வழக்கு தொடர்பான தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அதிரடியாக ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண் ஈஸ்வரியும், கார் டிரைவர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். 60 பவுன் தங்க, வைர நகைகள் மட்டும் திருட்டு போனதாக புகாரில் கூறி இருந்தாலும், 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை விற்று சோழிங்கநல்லூரில் நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை சுருட்டியதாக கைதான வேலைக்கார பெண், ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளிலும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அதிரடி விசாரணையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில், வீட்டில் இருந்து திருடப்பட்ட நகைகள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகைகள் குறித்தும், அவற்றை வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணம் குறித்தும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐஸ்வர்யா புகாரில் குறிப்பிட்டதைவிட கூடுதல் நகைகள் பணியாளர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதால் ஐஸ்வர்யாவிடம் போலீசார் இந்த முடிவெடுத்துள்ளனர்.