Skip to content
Home » தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

தந்தை உடலை தூக்கி வந்த அஜீத்….பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்…..முதல்வர் இரங்கல்

  • by Authour

நடிகர் அஜீத்குமாரின் வீடு சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ளது. அஜீத்குமாருடன் அவரது தந்தை  பிஎஸ் மணி என்கிற சுப்பிரமணி(85) தாயார்  மோகினி ஆகியோரும் வசித்து வந்தனர்.  இன்று அதிகாலை தந்தை  மணி காலமானார்.  அவரது உடலுக்கு அமைச்சர் உதயநிதி மற்றும் நெருங்கிய உறவினர்கள்  மட்டும் அஞ்சலி செலுத்தினர்.

மணி உடல்   11.50 மணி அளவில் வேனில்  பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்து வரப்பட்டது.  12.10 மணி அளவில் அந்த வேன்  மயானத்தை அடைந்ததும், அஜீத்தும் அவரது சகோதரர்களும் உடலை இறக்கி மயானத்துக்கு  தூக்கி வந்தனர். பின்னர் குடும்ப வழக்கப்படி,  மயானத்தில் செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை அஜீத்தும் அவரது சகோதரர்களும்  தந்தைக்கு செய்தனர்.

இந்னொரு வேனில்  அஜீத்தின் தாயார் மோகினி, மனைவி சாலினி, மகள்  மற்றும் நெருங்கிய உறவினர்கள் வந்தனர்.  மோகினி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், சாலினியும், அவரது மகளும் மோகினியை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர்.  சரியாக 12.20 மணிக்கு உடல் தகன மேடைக்கு அனுப்பபட்டு தகனம் செய்யப்பட்டது. 12.30 மணிக்கு அங்கிருந்து அஜீத் மற்றும் குடும்பத்தினர்  அங்கிருந்து வீட்டுக்கு காரில் கிளம்பி சென்றனர்.மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தந்தை மணி மறைவையொட்டி அஜீத் வீட்டு முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வீட்டு முன் யாரும் கூடாதவாறு போலீசார் பணியில் ஈடுபட்டனர். தந்தை மறைவு குறித்து அஜீத்குமாரும், அவரது அண்ணன் அனுப்குமார், மற்றும் தம்பிஅனில்குமார்  ஆகியோர் விடுத்துள்ள  ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

எங்களது தந்தையார் பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின்அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

இதற்கிடையே தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி உள்ளிட்ட பலர் அஜீத் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபோல திரைத்துறையினரும்  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர்கள் பார்த்திபன், பிரசன்னா ஆகியோரும் நேரில் சென்று அஜீத் தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *