பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று ஒரு நாள் மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்டத்தில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 60 பேரில் இச்சங்கத்தை சேர்ந்த 13 பேர் இன்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இருக்கைகளில் அலுவலர்கள் இல்லாததால் அலுவலகம் வெறிச்சோடி
காணப்படுகின்றன. பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மேசைகளில் கோப்புகளாக தேங்கி உள்ளன. இதனால் பல்வேறு துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போன்று மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, புகழூர், மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர் உள்ளிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.