பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இந்த தீர்ப்பு குறித்து அறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறி கடற்கரை சாலையில் மறியலில் ஈடபட்டனர். அவர்கள் கழுத்தில் கறுப்பு ரிப்பன் அணிந்திருந்தனர். சிலர் கருப்பு ரிப்பனை தலையில் கட்டிஇருந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோல காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி இன்று கும்பகோணம் ரயில் நிலையத்தில் மறயலில் ஈடுபட்டார். இதில் கும்பகோணம் மேயர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொய் வழக்கு போடும் மோடி அரசாங்கத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் ஜெயங்கொண்டம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டிருந்தவர்களை போலீசார் கைது செய்து நடை பயணமாக அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.