தஞ்சை மாவட்டம், திருவையாறில் சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட தனியார் கூட்டுறவு சங்க வங்கி கிளை 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் கிளை மேலாளராக கீழப்புனவாசலை சேர்ந்த மோகன் (45) பணியாற்றி வந்தார். இந்தக் கூட்டுறவு வங்கியில் நாள்தோறும் சிறுசேமிப்பு கடன் திட்டம் தொடங்கப்பட்டு வாடிக்கையாளர்கள் ரூ. 100, 200 செலுத்தி சேமித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு இக்கூட்டுறவு வங்கி தமிழகத்தில் உள்ள 84 கிளை வங்கிகளையும் மூடிவிட்டது.
அப்போது திருவையாறில் உள்ள கிளையையும் முடிவிட்டனர். இந்த வங்கியின் சேலம் தலைமை அலுவலகத்தில் முறைகேடு நடந்ததாகப் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக திருவையாறு கிளை மேலாளர் மோகன் வங்கிக்கு வரவில்லை. பணம் போட்ட பொதுமக்கள் கிளை மேலாளரை பிடித்து பணத்தை கேட்டபோது, வங்கியில் வந்து கணக்கை பார்த்து ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறினாராம்.
மோகனை சிலர் வங்கிக்கு அழைத்து வந்து திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவையாறு காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மோகனையும், வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி மார்ச் 27 ஆம் தேதி வாடிக்கையாளர்களை மேலாளர் மோகன் அழைத்துச் செல்வார் என்றும், சேலம் பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் கொடுத்து உங்களது பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுமாறும் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.