தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15ம் தேதி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலிக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பின்னர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று வெளியான மருத்துவமனை அறிக்கையின்படி இளங்கோவனுககு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்)என்பது தெரியவந்து உள்ளது.
இன்று காலை 11 மணி அளவில் அமெட் பல்கலைக்கழக வேந்தரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான டாக்டர் நாசே ஜே.ராமச்சந்திரன் மருத்துவமனையில் ஈவிகேஎஸ்.இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது இளங்கோவன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாசே ராமச்சந்திரன் கூறும்போது, ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலம் சம்மந்தமாக நேரிலும், தொலைபேசி மூலமும் மிகுந்த அக்கறையோடும், ஆர்வமுடனும் கேட்கும் காங்கிரஸ் பேரியக்க சகோதர, சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் பூரண நலத்துடன், தன்மானத்தலைவராக, அவருக்கே உரிய பாணியில் விரைவில் நம்மை சந்திப்பார்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மருத்துவமனை சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா சரியாகி விட்டது. அவர் தொடர்ந்து இருதய சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் இளங்கோவன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நலமுடன் இருக்கிறேன். 2 நாளில் வீடு திரும்புவேன் என கூறி உள்ளார்.