தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை பகுதி, காமராஜ் நகரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேய சுவாமிக்கு நேற்று பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் எழுத உள்ள அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், வெப்பம் தணிந்து தேவையான அளவிற்கு நல்ல மழை பெய்து நவதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை வேளாண் பொருட்களும் அமோக விளைச்சல் காணவும், அனைத்து வகை தொழில்களும் மேன்மை பெறவும், எந்த வகை நோய்த்தொற்றும் பரவாமல் உலக மக்கள் நலன் வேண்டியும் ஸ்ரீவிஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமிக்கு விளாமிச்சை வேர் (எ) குருவேர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமாருக்கு கவசம் அணிவிக்கப்பட்டு திரிசிதி மற்றும்
சகஸ்ரநாம அர்ச்சனையும், 1001 முறை இராம நாம ஜபமும் கூற, சிறப்பு பூஜைகளுடன் குங்குமம் மற்றும் உதிரிப்பூக்களை கொண்டு அர்ச்சனைகள் செய்த பிறகு மகா தீபாராதனையுடன், 16 விதமான சோடஷ உபசாரமும் செய்யப்பட்டது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், இத்தலத்து ஆஞ்சநேய சுவாமியிடம் தங்களது வேண்டுதலை வெள்ளை தாளில் எழுதி அதனை மட்டை தேங்காயுடன் சிவப்பு நிறத்துணியில் கட்டி அமாவாசை பூஜையில் வைத்து பிரார்த்தனை மேற்கொண்டால் எண்ணிய காரியம் மூன்று அமாவாசை காலங்களுக்குள் அதாவது 90 நாட்களில் முழுமையாக நிறைவேறும் என்பது அனுமன் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.