தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மொழித்தேர்வு நடந்தது. முதல்நாள் தேர்வு மிக எளிதாக இருக்க வேண்டும் என்பதுடன், தாய் மொழியாம் தமிழுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் எப்போதும் தமிழகத்தில் தமிழ்த்தேர்வு முதல் தேர்வாக நடத்தப்படுகிறது.
13ம் தேதி தேர்வு முடிந்த நிலையில் அன்று மாலையே பள்ளிக் கல்வித்துறைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 50,674 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சி. வழக்கமாக 4%பேர் ஆப்சென்ட் ஆவார்கள். ஆனால் இந்த ஆண்டு 6% பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர்.
இதுபள்ளிக்கல்வித்துறைக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் இத்தனை பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என அதிகாரிகள் விசாரிக்கத்தொடங்கினார்கள். இனி உள்ள தேர்வுகளில் இதுபோல ஆப்சென்ட் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அத்துடன் மாவட்ட நிர்வாகமும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வு நடந்தது. இந்த தேர்வுகளிலும் 47 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. இப்படி மாணவர்கள் கொத்து கொத்தாக ஆப்சென்ட் ஆவதால் கல்வித்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. இன்னும் உள்ள தேர்வுகளில் எத்தனை பேர் ஆப்சென்ட் ஆவார்களோ தெரியவில்லை.
ஆப்சென்ட் ஆனவர்களுக்கு ஜூன் மாதம் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு பொதுத்தேர்வு போல இருக்கும் அளவுக்கு ஆப்சென்ட் இருக்கும் என கூறப்படுகிறது.