ஆந்திராவில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒய்எஸ்ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மலிவு விலை வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வீடுகள் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், நகரி தொகுதியின் நிந்திரா மண்டலத்தில் உள்ள ஆரூரு எஸ்டி காலனியில் கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகளை அமைச்சர் ஆர்.கே.ரோஜா திறந்து வைத்தார். அவருடன் சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணா இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். மண்டலத்தில் உள்ள அரூர் பஞ்சாயத்து எஸ்டி காலனியை சேர்ந்த 26 பேருக்கு ரூ.46.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஜெகன்னா காலனி வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.கே.ரோஜா பேசுகையில், ‘மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பது தன் பொறுப்பு என உணர்ந்த நமது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இன்று பெண்களின் கனவை நிறைவேற்றி வருகிறார். பெண் குழந்தைகளுக்கு கல்வி, வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துகிறார். வீடுகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெறும் இடமெல்லாம் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கிறது’ என்றார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் வீடுகள் கிடைப்பது மட்டுமின்றி, தங்கள் பகுதிகளின் வளர்ச்சியிலும், மக்கள் பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அமைச்சர் ரோஜா குறிப்பிட்டார்.