திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்றார். தற்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த வீடு முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. முதல்வரை சந்திக்க ஏராளமான அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் அந்த சாலை முழுவதும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்திப்பதற்கு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். எனவே அந்த பகுதியில் இட நெருக்கடி ஏற்படுகிறது. எனவே அமைச்சர்களுக்காக அரசு வழங்கும் பங்களாவில் குடியேற அமைச்சர் உதயநிதி முடிவு செய்துள்ளார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி என்கிற பெயரில் உள்ள அரசு பங்களா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பங்களாவில் இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரியில் அவர் அந்த பங்களாவின் அருகில் உள்ள மலரகம் என்ற பங்களாவுக்கு மாறிச்சென்றார். தற்போது குறிஞ்சி பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு புதிய வண்ணம் பூச்சப்பட்டு தயாராகி வருகிறது. அடுத்த மாதம் அமைச்சர் உதயநிதி அந்த அரசு பங்களாவுக்கு குடியேறுகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அந்த பங்களாவில்தான் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.