ஈரோடு மாநகராட்சி கமிஷனரான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டவர் சிவக்குமார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரம் நகராட்சி கமிஷனராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தினர். இவ்வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக விஜிலன்ஸ் போலீசார் இன்று காலை சிவக்குமார் வீட்டிற்கு வந்தனர். ஆனால் சிவக்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் சோதனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து 2 போலீசாரை வீட்டில் காவலுக்காக நிறுத்திவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் திரும்பி சென்றிருந்தனர். பின்னர் சிவக்குமார் குடும்பத்தினர் வீடு திரும்பினர். இதையடுத்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் வருவாய்துறையை சேர்ந்த 2 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.