Skip to content
Home » ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கேள்வி..

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மரணமும் அதற்கு முன்பு அவருக்கு 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதையடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 5 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையம் 2022 ஆகஸ்ட் 23ம் தேதி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உயரதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், மாநில காவல்துறையை விசாரிக்க நியமிப்பது நியாயமான விசாரணைக்கு வழிவகுக்காது. உண்மை நீர்த்துப்போகும் என்பதால் சுதந்திரமான அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுசம்பந்தமாக, 2022ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தனது மனுவில் கோபால்ஜி கூறியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது சுகாதார துறையின் ஆய்வில் உள்ளது. மருத்துவ கவனக்குறைவு தொடர்பாக ஆய்வு செய்து சுகாதார துறை முடிவெடுக்கும் என கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசின் முழு விளக்கத்தைப் மார்ச் 27ம் தேதி தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *