2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பட்ஜெட்டில் மகளிருக்கு உரிமைத்தொகைக்காக நிதி ஒதுக்கியது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவீட்டரில் கூறியிருப்பதாவது…. “இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற கனவை முதலில் முன்னெடுத்தது மநீம கட்சி.” புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.