தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் விளார் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், கோவிந்தராஜலு உட்பட கிராம மக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது…
விளார் ஊராட்சி வடக்கு தெருவில் 40 வருடங்களுக்கு முன்பு கட்டிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து விட்டது. இதனால் அதை இடித்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விளார் பகுதியில் 3500க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். விளார் வடக்கு தெரு, தெற்கு தெரு, மேலத்தெரு, வாய்க்கால் தெரு, கீழ தெரு ஆகிய தெருக்களில் வசித்து வரும் மக்கள் வடக்கு தெருவில் முன்பு இருந்த குடி நீர் தொட்டியில் இருந்துதான் குடிநீர் பெற்று வந்தோம். தற்போது 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது.
முன்பை விட தற்போது விளார் கிராம மக்களுக்கு குடிநீர் அதிகம் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கம் தொட்டியாக மாற்றம் செய்து கட்டித் தர கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.