தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி மாநகருக்கும் பல திட்டங்ளை அறிவித்து உள்ளனர். பட்ஜெட் குறித்து திருச்சி கிஆபெவி அரசு மருத்துவமனைமருத்துவக்கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், திருச்சி பிரபல நரம்பியல் மருத்துவர் மற்றும் சுவச் பாரத் திருச்சி தூதுவருமான டாக்டர் எம்.ஏ. அலீம் கூறியதாவது:
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்துவதன் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் பயனடைவார்கள். இவர்கள் பணி செய்யும் இடங்களுக்கே மருத்துவ பணியாளர்கள் சென்று தொழிலாளர்களின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்த்மா மற்றும் புற்றுநோய் பற்றிய சோதனைகள் நடத்தப்படுவது தொழிலாளர் வர்க்கத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.
திருச்சி அண்ணல் காந்தி மருத்துவமனை மற்றும் கிஆபெவி மருத்துவ கல்லூரி ரூ.110 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே இடத்தில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பெறும் வசதி நோயாளிகளுக்கு கிடைக்கும். இது நோயாளிகளுக்கான வீண் அலைச்சலை தவிர்க்க உதவியாக இருக்கும்.
முதல்வரின் பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டு18ஆயிரம் பள்ளிகளிலும் இந்த காலை சிற்றுண்டி வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கப்படும். இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியா என்பதால் குழந்தை பருவத்திலேயே அவர்கள் ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமாக வளர இந்த திட்டம் மிகவும் பயனுள்ளது.
திருச்சி உள்பட 7 மாநகராட்சிகளுக்கு இலவச வைபை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், தொழில் சார்ந்தவர்களுக்கு மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.