திருச்சி பெரிய மிளகுபாறையில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 1991 1992ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் ‘1992 லவ்லி பிரண்ட்ஸ்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடந்தது. 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட மாணவ, மாணவிகள் ஒருவரையொருவர் கைகளை குலுக்கியும், ஆரத்தழுவியும் அன்பை பரிமாறி கொண்டனர். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பை பள்ளியில் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் மாணவ, மாணவிகள் சார்பில் பொன்மலைப்பட்டியில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்த மாணவ, மாணவிகளின் பள்ளி ஆசிரியராக அப்போது பணியாற்றிய ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோ கலந்து கொண்டார்.
மாணவ, மாணவிகளின் இந்த சந்திப்பு பற்றி முன்னாள் மாணவியும், தற்போது தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையுமான ஜெசிந்தா கூறும்போது… இத்தனை ஆண்டுகள் கழித்து என்னுடன் படித்த மாணவ, மாணவிகளை
சந்தித்தது மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னுடன் படித்தவர்கள் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு வேலைகளில் உள்ளனர். அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். நான் பள்ளிக்குள் நுழையும்போது, நாம் இப்போதும் இந்த பள்ளியின் மாணவி என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இனி ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் சந்தித்து கொள்வோம் என்றார்.