தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்வதற்காக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறையும் அவ்வாறே தாக்கலாகிறது. மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியை பார்த்து, அவர் பட்ஜெட் உரையை வாசிக்கிறார். உறுப்பினர்களும் தங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியில் பட்ஜெட் உரையை பார்த்து தெரிந்து கொள்வார்கள். சுமார் 2 மணி நேரம் பட்ஜெட் உரை இடம்பெறும் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த முறையும் நாளை (செவ்வாய்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அடுத்த நாள் (22-ந் தேதி) தெலுங்கு வருட பிறப்பு என்பதால் அரசு விடுமுறை நாளாகும். எனவே, சட்டசபைக்கும் விடுமுறை. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், நிதி மற்றும் வேளாண் துறை அமைச்சர்களின் பதிலுரையும் 23, 24, 27, 28 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் இடம்பெறும் என்று தெரிகிறது.
குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு இன்றைய பட்ஜெட் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.