சென்னை கேகே நகரில் நாம் தமிழர் கட்சியின் தமிழ்ப் பழங்குடிகள் பாதுகாப்பு பாசறை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சீமான் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் திமுக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு முருகன், சாந்தன் உள்ளிட்ட நான்கு பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது. 35 ஆண்டு கால போராட்டம், சிறையில் இருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தில் அடைப்பதற்காக அல்ல . சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக அவர்களை சிறையிலேயே மீண்டும் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் இருக்கிறது. இந்த நாலு பேர் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வரும் 23ம் தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது. நான் வாக்குகளை பிரிக்க வந்த ஆள் இல்லை. நாட்டை பிடிக்க வந்த ஆள். நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. இன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பதற்கு காரணம் நான் தான். ஏனென்றால் 37 தொகுதிகளில் வெறும் 400, 500 வாக்குகளில் அதிமுக தோற்றது. அந்த தொகுதிகளில் நாங்கள் 18 ஆயிரம், 20 ஆயிரம் வாக்குகள் வாங்கினோம். அதற்காக நான் திமுகவின் பீ டீம் ஆகிவிடுவேனா?. இந்த தமிழ் தேசிய அரசியலில் நான் தான் ராஜா. நாங்கள் தான் நம்பர் ஒன் என்றார்..