சென்னை அமைந்தகரையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை பேசிய போது, “கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. பா.ஜ.க.வை வலுப்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். அ.தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தியிருந்த நிலையில், அண்ணாமலையின் பேச்சு பா.ஜ.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தனது கருத்து தொடர்பாக விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “என்னுடைய கருத்து குறித்து டெல்லி மேலிட தலைவர்கள் பலரிடமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறேன். தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வர வேண்டும். அரசியல் களத்தில் நேர்மை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். பணம் இல்லாத அரசியலை முன்னெடுத்தால் மட்டுமே தமிழ்நாடு வளர்ச்சி அடையும். 2 ஆண்டுகளாக பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அனுபவத்தில் பேசுகிறேன். இனி வரும் காலங்களில் மிக தீவிரமாக பேச உள்ளேன். கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். எனது கருத்தில் 50 சதவீத பேருக்கு உடன்பாடும், 50 சதவீத பேருக்கு எதிர்கருத்தும் உள்ளது. ஆனால் என் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்.” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.