கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடப்ரா பகுதியை சேர்ந்தவர் பிரதீஷ்குமார் (28). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் விடுமுறையில் இவர் ஊருக்கு புறப்பட்டார். டில்லி-திருவனந்தபுரம் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர் பயணம் செய்தார். இதே ரயிலில் கர்நாடக மாநிலம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் படிக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் உடுப்பியிலிருந்து ஏறினார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பிரதீப் குமாரின் நேர் எதிரே உள்ள மேல் பெர்த்தில் அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்த பிரதீஷ் குமார் பின்னர் கட்டாயப்படுத்தி மதுவை குடிக்க வைத்துள்ளார். மது குடித்த சிறிது நேரத்தில் அவர் மயங்கி விட்டார். இதன் பின்னர் ரயிலில் வைத்து அவரை பிரதீஷ் குமார் பலாத்காரம் செய்துள்ளார். இரவு நேரம் என்பதால் மற்ற பயணிகள் அதை கவனிக்கவில்லை. எர்ணாகுளத்திற்கும் ஆலப்புழாவுக்கும் இடையே நேற்று முன் தினம் இரவு இந்த சம்பவம் நடந்தது. ரயில் திருவனந்தபுரத்தை அடைந்ததும் வீட்டுக்கு சென்ற அந்த இளம்பெண் தன்னுடைய கணவனிடம் விவரத்தை கூறியுள்ளார். இது குறித்து அவரது கணவர் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராணுவ வீரர் பிரதீஷ்குமாரை கைது செய்தனர். ஓடும் ரயிலில் வைத்து மது கொடுத்து மயக்கி பல்கலைக்கழக மாணவியை ராணுவ வீரர் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.