தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முகாம் அலுவலகத்தில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று இரவு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றி ஆலோசனைகளை வழங்கி வருவதற்கு இக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். குழுவின் ஆலோசனைகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், நிதி மேலாண்மைக்கும் மிக முக்கியமானவை என்று தெரிவித்தார். மேலும் இவ்வரசு பொறுப்பேற்றத்திலிருந்து நிறைவேற்றிய திட்டங்களை பற்றி முதல்வர் எடுத்துரைத்து விரைவில் வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதையொட்டி செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து குழுவின் மேலான ஆலோசனைகளை வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், குழுவின் உறுப்பினர்கள் பேராசிரியர் எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், பேராசிரியர் ழான் த்ரேஸ், டாக்டர் எஸ். நாராயண், மாண்புமிகு நிதி மற்றும் மனிதளவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . நா. முருகானந்தம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.