திருச்சி ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள திமுக எம்பி சிவா வீட்டில் சில நாட்களுக்கு முன் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் அதே தினம் செசன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் சிலர் புகுந்து அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த நபரை தாக்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக திமுகவை சேர்ந்த காஜா மலை விஜய், முத்துச்செல்வம் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் நேரு, எம்பி சிவா ஆகியோரின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலாக இது பேசப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் நேரு இன்று மாலை ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள சிவா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இதன்பின் பேட்டியளித்த அமைச்சர் நேரு, கழக குடும்பத்தில் நடக்க கூடாத விஷயம் நடந்து விட்டது. எனக்கு இந்த விஷயம் தெரியாது. சிவா வெளிநாட்டில் இருப்பதாக சொன்னார்கள். நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டிக்காத்து வருபவர்கள். உங்களுக்குள் இதுபோன்ற எந்த பிரச்னையும் இருக்க கூடாது என்று முதல்வர் பேசி சமாதானம் செய்து விட்டு வா என்று அனுப்பினார். நாட்டு மக்களுக்கு ஒற்றுமையை தெரிவித்து விட்டு வா என்றார். முதல்வர் கேட்டபோது, நான் அப்படி செய்வேனா என்று கூறினேன். மனதை விட்டு நானும் சொல்லி விட்டேன். சிவாவும் சொல்லி விட்டார் என்றார்.
இதுபற்றி சிவா எம்பி கூறுகையில், நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்றார்.