தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கொரோனோ பரிசோதனைகள், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல், வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில், தமிழ்நாட்டிலேயே கோவை மாவட்டம் தற்போது முதலிடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் புறநகர்பகுதிகளில் பரவல் அதிகம் உள்ளதால், 462 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் சராசரி தொற்று விகிதம் 0. 61ஐ விட அதிகமாக உள்ளது.