Skip to content
Home » போலீஸ் நிலைய வீடியோ…வெளியிட்ட கருப்பு ஆடு…. திருச்சியில் விசாரணை

போலீஸ் நிலைய வீடியோ…வெளியிட்ட கருப்பு ஆடு…. திருச்சியில் விசாரணை

  • by Authour

அமைச்சர்  கே.என். நேரு   நேற்று காலை திருச்சி ராஜா காலனியில்  உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு சென்றபோது திடீரென அங்கு திருச்சி சிவா  எம்.பியின் வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 3 பேர் அமைச்சரின் காரை  மறித்து கருப்புகொடி காட்டினர். இதனால் அமைச்சர் நேருவின் ஆதரவாளர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த  நேருவின் ஆதரவாளர்கள் சிலர் திடீரென சிவா எம்.பி வீட்டுக்குள் புகுந்து  அங்கிருந்த கார், பைக், நாற்காலிகளை அடித்து உடைத்தனர்.

அமைச்சருக்கு கருப்புகொடி காட்டிய நபர்கள் சிலரை கோர்ட் போலீசார்  பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்ற திமுகவினர் சிலர் ஸ்டேஷனுக்குள் புகுந்து அவர்களை தாக்கியதாக தகவல் வெளியானது.. அடுத்த சில நிமிடங்களில் ஸ்டேஷனுக்குள் திமுகவினர் உள்ளே செல்வது மற்றும் சிலர் தாக்குவது போன்ற வீடியோக்கள் அனைத்து டிவிக்கள், சமூக வலைத்தளங்களில் வெளியானது.அதோடு மட்டுமல்லாமல், முக்கிய அதிமுக நிர்வாகிகள் அனைவரது செல்போன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சில நிமிடங்களில் இந்த பதிவுகள் தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு  கிடைத்து உள்ளது. அந்த அளவு இவர்கள் திட்டமிட்டு வேலை செய்து உள்ளனர்.

இந்த பதிவுகள் எப்படி சமூக வலைதளங்களிலும், ஊடகவியலாளர்களுக்கும், குறிப்பாக அதிமுகவினருக்கும்  கிடைத்தது என  சம்பந்தப்பட்ட  போலீஸ் நிலைய அதிகாரிகளிடம்  சென்னையில் இருந்து உயர் அதிகாரி ஒருவர்  நேரடியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ பதிவுகள்  சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த 2 போலீஸ்காரர்கள், உளவுத்துறையை சேர்ந்த ஒரு போலீஸ்காரர் என 3 பேருக்கு மட்டுமே விசாரணைக்காக கொடுக்கப்பட்டு உள்ளது.  அந்த 3 பேரிடம் இருந்து தான் அனைவருக்கும் இந்த பதிவுகள் பகிரப்பட்டு உள்ளது.  அதை கொடுத்தது யார் என விசாரணை நடத்தும்படி   சைபர் கிரைம் போலீசாருக்கும் மேலிடம்  உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமன்றம்  வரும் 20ம் தேதி கூடும் நிலையில், இந்த பிரச்னையை  பெரிதாக்க வேண்டும் என்ற  திட்டத்துடன் தான் இவர்கள்  எதிர்க்கட்சியினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் இதனை பகிர்ந்துள்ளனர்.  அதாவது முதல்வரின்  துறை மீது களங்கம் ஏற்படுத்துவதன் மூலம் முதல்வருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் வெளியிட்டு உள்ளனர். இவர்களுக்கும்  எதிர்க்கட்சி தலைவர்கள் சிலருக்கும்  ரகசிய தொடர்பு இருக்கலாம்  என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

அரசு பணியில் இருந்து கொண்டே அரசுக்கும், குறிப்பாக முதல்வருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த  திட்டம் தீட்டிய அந்த கருப்பு ஆடு யார் ?என்பதை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்  போலீஸ்  உயர் அதிகாரிகள்  தீவிரமாக உள்ளார்களாம். எனவே கருப்பு ஆடு  இரண்டொரு நாளில்  சிக்கும் என்றும்  போலீஸ் வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *